கோவையில் கட்டமைக்கப்பட்ட அஞ்சலக ஏடிஎம், மக்கள் பயன்பாட்டுக்கு நேற்று முதல் கொண்டு வரப்பட்டது. அஞ்சல்துறை தமிழகத் தலைவர் எம்.எஸ்.ராமானுஜன் புதிய ஏடிஎம் மையத்தைத் தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் கோர் பேங்கிங் வசதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, அஞ்சலக வாடிக்கையாளர்களின் பயன்பாட்டுக்கு வங்கிகளைப் போன்று, தானியங்கி பணப்பட்டுவாடா மையங்கள் கொண்டு வரப்பட்டன.
கடந்த 2014-ம் ஆண்டு, அப்போதைய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சென்னை தி.நகரில் அஞ்சலக ஏடிஎம் மையத்தைத் தொடங்கி வைத்தார். மாநிலம் முழுவதும் சுமார் 100 ஏடிஎம் மையங்கள் கட்டமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கோவை அஞ்சலகக் கோட்டத்தில், ஆர்.எஸ்.புரம் தலைமை அலுவலகம், கூட்ஸ்செட் சாலையில் உள்ள அஞ்சலக அலுவலகம் என இரு இடங்களில் ஏடிஎம் மையங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் கட்டமைக்கப்பட்டு 10 மாதங்கள் ஆகியும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் இருந்தது.
இது தொடர்பாக கடந்த மார்ச் 7-ம் தேதி, ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் விரிவான செய்தி பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, கூட்ஸ்செட் சாலையில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தை, அஞ்சல்துறை தமிழகத் தலைவர் எம்.எஸ்.ராமானுஜன் தொடங்கி வைத்தார். பின்னர், அஞ்சல்துறை வாடிக்கையாளர்கள் 4 பேருக்கு ஏடிஎம் அட்டைகளை அவர் வழங்கினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
இந்தியா முழுவதும் வரும் 2016 மார்ச் மாதத்துக்குள் 500 ஏடிஎம் மையங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை முதல் கட்டமாக முக்கிய இடங்களில் 15 ஏடிஎம் மையங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அடுத்த கட்டமாக, 608 இடங்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
மேற்கு மண்டலத்தில் முதன் முதலாக கோவையில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஏடிஎம் மையம், மாநிலத்தில் 6-வது மையமாகும். ஏற்கெனவே, சென்னை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் திறக்கப்பட்டுள்ளன. அஞ்சலக சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏடிஎம் அட்டையைப் பெற்று பயன்படுத்தலாம். விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் ஏடிஎம் அட்டை வழங்கப்படும். இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர் சேமிப்புக் கணக்கில் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் பணம் வைத்திருக்க வேண்டும்.
தொடங்கப்பட்டுள்ள ஏடிஎம் ஞாயிற்றுக்கிழமை தவிர ஏனைய நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். இந்த சேவை மூலமாக ஒருமுறை ரூ. 10 ஆயிரம் வரையும், நாளுக்கு அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரையிலும் வாடிக்கையாளர் பணம் எடுக்கலாம். இதனால், அஞ்சல் அலுவலகங்களில் பணம் பெறுவதற்காக வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நேரம் குறையும். இந்த சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment