கடந்த தலைமுறையினரின் உணர்வுகளை சுமந்துசென்ற தபால் பெட்டிகளின் பரிதாபம் அகற்ற அஞ்சல் துறை முடிவு
பதிவு செய்த நேரம்:2015-03-02 11:16:07
மதுரை, : தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியினால் தபால் பெட்டிகளின் பயன்பாடுகள் வெகுவாய் குறைந்து விட்டது. இதனால் பயன்பாடின்றி தொங்கி கொண்டிருக்கும் பெட்டிகளை அகற்ற அஞ்சல்துறை முடிவு செய்துள்ளது. கடந்த தலைமுறையின் தகவல் தொடர்பு பரிமாற்றத்தில் பிரதான இடம்பிடித்தது தபால். கல்வி, மகிழ்ச்சி, சோகம், பிரச்னை, வேலை, திருமணம் என்று பலரது வாழ்வின் நிகழ்வுகளையும் நாட்டின் ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்கு கொண்டு சென்றதில் அஞ்சல்துறை பெரும் பங்கு வகித்தது. இதனால் தபால்காரர்களும், தபால்பெட்டியும் வாழ்வில் நீங்காத நினைவுகளாக பலருக்கும் நிலைத்திருந்தது. தபால் அனுப்புவதில் பலரும் முனைப்பு காட்டியதால் அவர்களுக்கு வசதியாக பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தபால் பெட்டிகள் வைக்கப்பட்டன.
புதிய நகர் உருவாக்கத்தின் போது பொதுமக்களே தங்கள் பகுதிக்கு தபால்பெட்டி வேண்டும் என்று விரும்பி விண்ணப்பித்த காலமும் உண்டு. இதனால் ஒரு தெருவிற்கு ஒரு சிவப்பு பெட்டி காட்சியளித்தது. இதெல்லாம் 15ஆண்டுகளுக்கு முந்தைய நிலை. மொபைல் பொதுமக்கள் புழக்கத்தில் எப்போது வந்ததோ, அப்போதே தபால் எழுதும் வழக்கமும் வெகுவாய் குறைய தொடங்கியது. நினைத்த நொடியில் ஆயிரக்கணக்கான கி.மீ தூரத்தில் இருப்பவர்களிடமும் பேசவாய்ப்பு வந்தது. கேமரா மூலம் முகம்பார்த்து பேசும் வசதியால், இத்தொடர்பு சாதனங்கள் மீது பொதுமக்களுக்கு ஈர்ப்பு ஏற்படத் துவங்கியது.
மேலும் இணையம் மூலம் விண்ணப்பித்தல், படங்களை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு கூடுதல் வசதிகளும் கிடைத்ததால் தபால் தொடர்புகள் சரியத்தொடங்கின. இதனால் கடந்த 5ஆண்டுகளாக தபால் பெட்டிகளின் தேவைகளும், பயன்பாடும் குறையத் துவங்கி உள்ளன. முன்பு மாவட்டம் முழுவதும் 2ஆயிரத்திற்கு மேற்பட்ட பெட்டிகள் இருந்தன. தற்போது கிராமப்புறங்களில் மிகச்சிறிய பெட்டிகள் 377ம், அதற்கு அடுத்த உருளை வடிவ சிறிய பெட்டிகள் 520, உருளைவடிவ பெரிய பெட்டிகள் 540ம் பயன்பாட்டில் உள்ளன. அதேபோல் தொலைக்காட்சி முகப்பு பெட்டிகள் 18ம், 4 அடி உயரம் உள்ள பில்லர்பாக்ஸ் 14ம் என மொத்தம் 1469பெட்டிகளே தற்போது பயன்பாட்டில் உள்ளது. இதில் பல பெட்டிகளில் தபால்கள் போடப்படுவதே இல்லை. வெறுமனே தபால் ஊழியர்கள் இவற்றை திறந்து பார்த்து விட்டு வருகின்றனர். நேர விரயம், ஊழியர்களின் பணிகளை இன்னமும் முறைப்படுத்த மாவட்ட அளவிலான தபால் பெட்டிகளின் எண்ணிக்கையை மேலும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக ‘தபால் இல்லாத பெட்டிகள்‘ குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. இன்னும் சில மாதங்களில் பல பெட்டிகள் அஞ்சல் துறையினரால் கையகப்படுத்தப்படும் என்று தெரிகிறது. இருப்பினும் சில இடங்களில் பெட்டிகள் சிதிலமடைந்து திறக்கப்படும் நேரம் குறித்த விபரமும் இல்லாமல் கிடக்கின்றன. தபால் போட வருபவர்களுக்கு இது நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து அஞ்சல்துறை அதிகாரிகள் சிலர் கூறுகையில், தபால்பெட்டிகள் மோல்டு மூலம் செய்யப்பட்டு முன்பு மதுரையில் இருந்து அதிகளவில் பெறப்பட்டன. கணினிமயத்தினால் தற்போது இவற்றின் பயன்பாடு வெகுவாய் குறைந்து விட்டது. தபால்கள் போடாத பெட்டிகள் குறித்து ஆய்வு செய்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். பயன்பாடு குறைந்ததால் கடந்த ஆண்டு தந்தி முறை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சோதனை தபாலில் தொய்வு
பெட்டிகள் உரிய நேரத்தில் திறக்கப்படுவதை கண்காணிக்க சோதனை தபால் திட்டம் உள்ளது. அதிகாரிகள் இதற்கான தபாலை நிர்ணயித்த பெட்டியில் போட்டு விட்டு ஊழியர்கள் சரியான நேரத்தில் பெட்டியைத் திறந்து தபால்களை அஞ்சலகத்திற்கு கொண்டு வருகின்றனரா என்று ஆய்வு செய்வர். இப்பணியிலும் தற்போது பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
- See more at: http://www.dinakaran.com/
No comments:
Post a Comment