20 வருடங்களுக்கு பிறகு ஒரு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இது வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
அச்சடிப்பதற்கு அதிகம் செலவாகிறது என்பதால் 1994-ம் ஆண்டு ஒரு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டது. 1995-ம் வருடம் பிப்ரவரி மாதத்தில் 2 ரூபாய் நோட்டுகளையும், அதே ஆண்டு நவம்பர் மாதம் 5 ரூபாய் நோட்டுகளையும் அச்சடிப்பதை மத்திய அரசு நிறுத்தியது. இருந்தாலும் பழைய நோட்டுகள் இன்னும் ஏற்றுக்கொள்ளப்பட்டு புழக்கத்தில் இருக்கிறது.
தாள்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்ட பிறகு, இதே மதிப்புக்கு நாணயங்கள் மட்டுமே வழங்கப்பட்டன. புதிய ஒரு ரூபாய் நோட்டுகளில் நிதிச்செயலாளரின் கையெழுத்து இருக்கும். காரணம் ஒரு ரூபாய் நோட்டுகளை மட்டும்தான் அரசாங்கம் வெளியிடுகிறது. மற்ற 2,5,10,20,50,100,500,1000 ரூபாய் நோட்டுகளில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் கையெழுத்து இருக்கும். காரணம் இந்த நோட்டுகளை வெளியிடுவது ரிசர்வ் வங்கி.
புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் வண்ணங்களிலும் வித்தியாசமாக இருக்கும். இவை இளஞ்சிவப்பு (பிங்க்) மற்றும் பச்சை வண்ணத்தில் இருக்கும். இதற்கு முன்பு அவை இண்டிகோ வண்ணத்தில் இருந்தது. புதிய ஒரு ரூபாய் நோட்டில் இந்திய அரசு முத்திரையும் அதற்கு கீழே இந்திய அரசு என்றும் அச்சிடப்பட்டிருக்கும்.
நாணயங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது மற்றும் நாணயங்களை உருக்குவது ஆகிய காரணங்களால் ஒரு ரூபாய் நோட்டு அச்சடிப்பது என்று மத்திய அரசு முடிவு செய்திருக்கலாம். ஆனால் எவ்வளவு நோட்டுகள் அடிப்பது என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
No comments:
Post a Comment