இ-காமர்ஸ் நிறுவனங்களின் செயல்பாடுகள் கவலை அளிப்பதாக உள்ளது என்று ஆர்பிஐ துணை கவர்னர் ஹெச்ஆர்.கான் தெரிவித்துள்ளார். விரைவில் இந்த நிறுவனங்களுக்கு வழிகாட்டு விதிமுறைகள் கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இ-காமர்ஸ் நிறுவனங்களின் பரிவர்த்தனைகளைப் பார்த்து இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இ-கமார்ஸ் நிறுவனங்களின் வளர்ச்சி புதிய பாய்ச்சலாக இருக்கிறது. இதை நாம் புறக்கணிக்க முடியாது. இதை கண்காணித்துக்கொண்டுதான் இருக்கிறோம். விரைவில் இவற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிடும் என கான் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக எந்த நிறுவனத்தையும் குறிப்பிடாமல் பேசிய கான். இது தொடர்பாக ஆர்பிஐ மூத்த அதிகாரிகளிடத்தில் மத்திய தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார் என்றும், தொழில்துறை அமைச்சகமும் இதை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கான் பேசியுள்ளார்.
தொழில்துறை அமைச்சகமும் இ-காமர்ஸ் விவகாரங்களில் முக்கிய முடிவு எடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இ-காமர்ஸ் நிறுவனங்களின் கொள்முதல் மற்றும் தள்ளுபடி முறைகள் குறித்த இந்த வழிகாட்டுதல்கள் குறித்து ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். இ-காமர்ஸ் நிறுவனங்களால் சிறு மற்றும் குறு தொழில்களின் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. என்றும் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அரசு பத்திரங்களில் முதலீடு செய்வது அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்றும், பணத்தை திரும்ப எடுப்பதற்கான சுமைகளைக் குறைப்பதற்கு திட்டமிடவேண்டும் என்று கான் குறிப்பிட்டார். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பேமண்ட் வங்கிகள் மற்றும் சிறிய வங்கிகளுக்கான கொள்கைகளால் பெரிய வங்கிகளுக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்றும் ஆனால் போட்டிகள் அதிகரிக்கும் என்றும் கான் பேசியுள்ளார்.
SOURCE : THEHINDU