காப்பீட்டுத் துறையில் ஏற்கெனவே 26 சதவீத அந்நிய நேரடி முதலீடு இருந்து வரும் நிலையில் 49 சதவீத நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். பொருளாதார சீரமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அரசு காலந்தாழ்த்தாது என்று கூறியுள்ளார் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி. இதற்கான சட்ட திருத்தத்துக்கு மாநிலங் களவையில் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறமுடியவில்லை என்பதால் அப்படி குறிப்பிட்டுள்ளார் நிதி அமைச்சர்.
அந்நிய நேரடி முதலீட்டின் சாதக பாதகங்கள் என்ன? என்பது குறித்து பொருளாதார நிபுணர் களிடம் பேசினோம். அந்நிய நேரடி முதலீடு என்பது இந்தியாவுக்கு புதியது கிடையாது. என்றாலும் அது எவ்வளவு அனுமதிப்பது என்பது அரசின் முடிவு சார்ந்தது. பொருளாதார வளர்ச்சிக்கு அந்நிய நேரடி முதலீடு அவசியம் என்பது ஏற்புடையதுதான் என்றாலும் எந்தெந்த துறைகளில் அனுமதிப்பது? எத்தனை சதவீதம் அனுமதிப்பது என்பதில் அரசு தெளிவாக முடிவு செய்ய வேண்டும்.
நமது வளர்ச்சிக்கு என்று சொன்னாலும், நிச்சயமாக, லாபமில்லாத தொழில்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்யப் போவதில்லை. நல்ல லாபம் வரும் தொழில்களில் மட்டுமே அந்நிய முதலீட்டாளர்கள் கவனம் செலுத்துவர். அந்த வகையில் காப்பீட்டுத் துறையில் 49 சதவீத முதலீடு என்று கூறப்படுவதற்கு பின்னால் அந்த துறையில் நல்ல லாபம் பார்க்க முடியும் என்பதுதான். ஆனால் காப்பீடு துறை இந்தியாவில் சேவை சார்ந்த துறையாகத்தான் இப்போதும் செயல்பட்டு வருகிறது. அதாவது 26 சதவீத நேரடி முதலீடு அனுமதி இருந்துகொண்டிருக்கும் போதே அது மக்களுக்கான சேவை துறையாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது.
49 சதவீத முதலீட்டுக்கு அனுமதி என்பது காப்பீட்டை சேவைதுறை என்கிற மனப்பான்மையிலிருந்து விலகி, லாபகரமான தொழில் என்கிற மாற்றத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்கின்றனர். அதே சமயத்தில் காப்பீடு குறித்த புரிதலும், காப்பீடு துறைகளில் வளர்ச்சியும் இருக்கும் என்கின்றனர்.
ஐஆர்டிஏ போன்ற வலுவான கட்டுப்பாடு அமைப்புகள் இருந்தாலும், காப்பீடு வழங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கக்கூடிய சூழ்நிலையும், அந்நிய நிறுவனங்கள் லாபகரமான பாலிசிகளோடு இயங்கும் நிலை உருவாகும் என்கின்றனர் நிபுணர்கள்.
மேலும் இதன் சாதகம் என்னவென்றால் காப்பீடு நிறுவனங்களிடையே போட்டி உருவாகும். இதனால் மக்களுக்கு பலவகையான பாலிசிகள் கிடைக்கும். காப்பீட்டின் அவசியம் குறித்த புரிதல் உருவாகும். புதிய நிறுவனங்கள் சந்தையை பிரித்துக் கொள்ளும் போட்டியில், குறிப்பிட்ட காப்பீட்டுக்கு என்கிற சிறப்பு காப்பீட்டுத் திட்டங்கள் உருவாகும் என்றனர்.
ஆனால் லாபகரமான பாலிசிகள் மற்றும் நகர்ப்புற வாடிக்கையாளர்களை இந்த புதிய நிறுவனங்கள் ஈர்த்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இதனால் அரசு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்கவும் வாய்ப்புள்ளது.
அந்நிய நேரடி முதலீட்டை கொண்ட நிறுவன பங்குகளில் முதலீடு செய்து அதன் மூலம் ஆதாயம் அடையலாம். அதே நேரம், காப்பீடு பாலிசிதாரராக அரசு பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களில் பாலிசியை எடுத்துக் கொள்ளலாம். இந்த மனநிலை இருந்தால் நமது பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களும் நஷ்டத்தை சந்திக்காது. அந்நிய முதலீட்டையும் எதிர்த்து நிற்க வேண்டாம் என்றும் குறிப்பிடுகின்றனர்.
அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிப்பது ஆபத்தா இல்லையா என்பதை பேசிக் கொண்டிருப்பதைவிட நமது பொதுத்துறை நிறுவனங்களை எப்படி வலுவாக்குவது என்று யோசிக்கலாம்.
source : THE HINDHU