OFFICE BEARERS : PRESIDENT:C.NAGENDRAN-9443443054 SECRETARY :K.SIVAMOORTHY - 9994240223 TREASURER: C.KARTHIKA VICE PRESIDENT: 1.S.MOHAN 2.V.CHANDRASEKAR 3.V.RAVINDRAN 4.M.KUPPAMUTHU ASST SECRETARY: 1.M.EZHILARASAN 2.R.SARAVANAN 3.R.MURUGESWARI 4.P.GANESAN ASST TREASURER:S.HABEEB ORGANIZING SECRETARY:1.S.V.PARAMASIVAM 2.S.PANDIAN 3.M.RIKHASMOHAMED

Pages

Friday 20 February 2015

ஒரு கார்ப்பரேட் நீதி கதை.

ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளை கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான்.

ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு அவனிடம் வந்து "எஜமான்! இரண்டு ஆண்டுகளாக நான் உங்களிடம் வேலை செய்கிறேன். ஆனால் நான் செய்யும் வேலைக்கு நீங்கள் எனக்கு சாப்பிட கொடுக்கும் புல்லின் அளவோ மிக குறைவு. தயவு செய்து எனக்கு நீங்கள் கொடுக்கும் புல்லின் அளவை அதிகரியுங்கள்" என்றது. மாடு சொன்னதை கவனமாக கேட்ட வியாபாரி "மாடே! நீ கடினமாக உழைப்பது உண்மையே. ஆனால் பக்கத்துக்கு வீட்டுக்காரன் மாடு 25 மூட்டைகளை தன் வண்டியில் சுமக்கிறது. ஆனால் நீயோ தினமும் 20 மூட்டைகளை மட்டுமே சுமக்கிறாய். நீ அதிக மூட்டைகளை சுமந்தால் உனக்கு புல்லின் அளவைஅதிகரிப்பதை பற்றி யோசிக்கிறேன்" என்றான். பக்கத்து வீட்டு மாடு பஞ்சு மூட்டைகளை மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாமல் இந்த மாடும் அதிக மூட்டைகளை சுமக்க ஒப்பு கொண்டது.

இப்படியே ஓராண்டு சென்றது. மாடு மீண்டும் சென்று வியாபாரியிடம் புல்லின் அளவை அதிகரிக்க கேட்டது. அதற்கு வியாபாரி "மாடே! அதிக பாரம் ஏற்றியதால் நம்முடைய பழைய வண்டி பாதிப்பு அடைந்து விட்டது. எனவே நான் இப்போது புது வண்டி செய்ய சொல்லியுள்ளேன். அதற்கு ஆகும் செலவை வேறு நான் பார்க்க வேண்டும். இன்னும் சற்று நாள் பொறுத்துக் கொள். நான் புல்லின் அளவை நிச்சயம் அதிகரிக்கிறேன்" என்றான். வேறு வழியின்றி மாடும் ஒத்து கொண்டது.

 புது வண்டி வந்த ஆறு மாதங்களுக்கு பின் மாடு மீண்டும் வியாபாரியிடம் சென்று வழக்கமான கோரிக்கையை வைத்தது. இப்போது வியாபாரி, "மாடே! இப்போதெல்லாம் உன்னுடைய வேகம் மிக குறைந்து விட்டது. பக்கத்துக்கு ஊருக்கு செல்ல முன்பை விட அதிக நேரம் எடுத்து கொள்கிறாய். இதனால் நான் வியாபாரம் செய்ய கூடிய நேரம் குறைந்து விட்டது. எனவே உனக்கு அதிக புல் தருவது இப்போதைக்கு சாத்தியமில்லை" என்றான். கோபமடைந்த மாடு "எஜமான்! இந்த புது வண்டியின் பாரம் பழைய வண்டியை விட மிக அதிகம். இந்த கனத்தையும் சேர்த்து இழுக்க வேண்டியதாலேயே என்னால் முன்பு போல விரைவாக செல்ல முடியவில்லை" என்றது. அதற்கு வியாபாரி "மாடே! நீ என்ன காரணம் சொன்னாலும் உன்னால் எனக்கு அதிக லாபத்தை பெற்று தர முடியவில்லை. நான் உன் மேல் ஏற்றும் மூட்டைகளின் எண்ணிக்கையை வேண்டுமானால் குறைத்து விடுகிறேன். ஆனால் நீ அதிக புல் கேட்காதே" என்றான். தன் இத்தனை ஆண்டு உழைப்பும் வீணாகி விடும் என்று பயந்த மாடு "வேண்டாம் எஜமான். நான் எப்படியாவது வேகமாக சென்று உங்களுக்கு அதிக லாபம் பெற்று தந்து விடுகிறேன்" என்று கூறியது.

மறுநாள் முதல் மாடு தன் சக்தியெல்லாம் திரட்டி வேகமாக ஓட ஆரம்பித்தது. மீண்டும் முன்பு எடுத்து கொண்ட அதே நேரத்திலேயே பக்கத்துக்கு ஊருக்கு சென்று வியாபாரியை சேர்க்க தொடங்கியது. ஆனால் மிக கடின உழைப்பால் ஒரே மாதத்திலேயே நோயுற்று படுத்த படுக்கையானது. வழக்கமாக சாப்பிடும் புல்லை கூட அதனால் சாப்பிட முடியவில்லை. சில நாட்கள் அதற்கு நோய் குணமாக மருந்து கொடுத்த வியாபாரி ஒரு நாள் அதனிடம் "மாடே! உன்னை நல்ல விலைக்கு ஒருவர் கேட்கிறார். அவரிடம் உன்னை விற்று விட போகிறேன்" என்றான். "எஜமான்! நான் இப்போது இருக்கும் நிலைமையில் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னை ஏன் அவர்கள் விலைக்கு கேட்கிறார்கள்?" என்றது. வியாபாரி அதற்கு "அவர்கள் உன்னை வேலை செய்ய சொல்ல வாங்கவில்லை. உன்னை கொன்று உன் தோலை எடுக்கவே உன்னை விலைக்கு கேட்கிறார்கள்" என்றான்.

வியாபாரி சொன்ன பதிலை கேட்டதும் மாட்டிற்கு கண்களில் நீர் வர தொடங்கியது. "எஜமான்! நீங்கள் செய்வது அநியாயம். உங்கள் பேச்சை நம்பி மாடாய் உழைத்தாலேயே நான் நோயுற்றேன். இல்லாவிடில் நான் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருந்திருப்பேன். நீங்கள் செய்தது துரோகம்" என்றது. அதை கேட்ட வியாபாரி, "நான் செய்தது துரோகம் இல்லை. ஒரு எஜமானனின் லட்சியம் தன் தொழிலாளியிடம் முடிந்த அளவு அதிக வேலை வாங்கி லாபம் பெறுவது. நான் அதையே செய்தேன். உன்னால் ஐந்து ஆண்டுகளில் சம்பாதிக்க வேண்டிய பணத்தையும் மூன்றே ஆண்டுகளில் சம்பாதித்து விட்டேன். இப்போது உன்னை விற்பதன் மூலமும் பணம் சம்பாதிக்க போகிறேன். என்னுடைய அதிக லாபம் பெரும் நோக்கம் நிறைவேற உன்னுடைய ஆசையை மூலதனமாக்கி கொண்டேன். நீ முதல் முறையிலேயே சுதாரித்து கொண்டிருந்தால் தப்பித்து விட்டு இருக்கலாம்" என்றான். மாடு தன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்து கொண்டது.
    நீதி: நிர்வாகத்தின் நோக்கம் ஊழியர்களிடம் இருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்குவது. இதற்காக அவர்கள் பொய்யான வாக்குறுதிகளையும் தரலாம். ஊழியர்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment