விலங்கு காட்சி சாலையில் புலி இளைஞரைக் கடித்தது, கிராமத்தில் வளர்க்கப்பட்ட ஆடுகளை செந்நாய்கள் கடித்துவிட்டன, தோட்டத்தில் புகுந்த யானைகள் காட்டுக்குத் திரும்பவில்லை, வண்டலூர் அருகே சிறுத்தை நடமாட்டம்... இப்படிப்பட்ட செய்திகளில் ஏதாவது ஒன்றைத் தினசரிக் கேள்விப்படுகிறோம்.
இந்தச் சம்பவங்கள் மூலம் விலங்குகள் நமக்கு உணர்த்துவது என்ன? தேவையில்லாத வீண் பிரச்சினைகள், எப்போதும் பயம், நம்மை இயல்பாக வாழவிடுவதில்லை என்பதா? நிச்சயம் இல்லை. இந்தச் சம்பவங்கள் அனைத்துக்கும் முழு காரணம் சம்பந்தப்பட்ட விலங்குகள்தான் என்று நாம் நம்புகிறோம். ஆனால், அதுவா உண்மை?
இயல்பு மாற்றம்
மனித நடவடிக்கைகளால் விலங்குகளின் இயல்பு எவ்வாறு மாறுபடுகிறது என்பதைப் பற்றி விலங்குகளின் நடத்தையை ஆராயும் ஆய்வாளரும், பத்திரிகையாளருமான ஜெஃப்ரி மொசெஃப் மேஸான் எழுதிய ‘பீஸ்ட்ஸ்' புத்தகம், நமது புரிதலுக்குப் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும்.
விலங்குகள், மனிதர்களிடத்தில் பகை உணர்வைக் காட்டுவதற்கு அவற்றின் உணவு மற்றும் வாழிடம் அழிக்கப்படுவதுதான் முதன்மைக் காரணம். இப்போது ‘கேனிபலிஸம்' எனப்படும் தன் இனத்தைத் தானே கொல்லும் இயல்புடையதாக சில விலங்குகள் மாறியிருக்கின்றன. மனிதர்களிடத்தில் காணப்படும் இந்தக் குணம், இதற்கு முன்பு விலங்குகளிடம் காணப்பட்டதில்லை. அதற்கு, நாம்தான் காரணம்.
உணவு அழிப்பு
பொதுவாகவே புலியோ, சிங்கமோ அல்லது முதலையோ மனிதர்களைக் கொன்றுவிட்டால், உடனே அவற்றுக்கு 'மனித ரத்த வாடை பிடித்துவிட்டது. அதனால் மனிதனை உணவாக்கிக் கொண்டுவிட்டது' என்று பலரும் பிதற்ற ஆரம்பித்துவிடுகிறார்கள்.
ஆனால், அது உண்மையல்ல. உயிர்ச் சூழலில் உணவுச் சங்கிலி மிக முக்கியமானது. உலகைக் கட்டுப்படுத்தும் திறனைப் பெற்றிருப்பதால், உணவுச் சங்கிலியில் மனிதன் உச்சத்தில் இருக்கிறான். அதனால் தனக்குக் கீழே இருக்கும் உயிரினங்களை மனிதன் உணவாக உட்கொள்வானே தவிர, அந்த உயிரினங்களுக்கு எப்போதும் அவன் உணவாவதில்லை.
புலி, சிங்கம், முதலை, சுறா போன்ற இயற்கை இரைகொல்லிகள் உயிர்ச் சூழலில் முக்கியப் பங்காற்றுகின்றன. அவை தன் இன உயிரினங்களைக் கொல்வதில்லை. மற்ற இன உயிரினங்களான மான், ஆடு, மாடு, மீன் உள்ளிட்டவற்றை உணவாகக் கொள்கின்றன.
வளர்ப்பும் அத்துமீறலும்
விவசாயம் தோன்றுவதற்கு முன்பு மனித இனம், விலங்குகளை வேட்டையாடி உண்டது. அப்போது நாய், மாடு, குதிரை உள்ளிட்ட விலங்குகள் வளர்ப்பு விலங்காக மாறியிருக்கவில்லை. விவசாயம் தோன்றிய பிறகு, தேவைக்கேற்ப விலங்குகளைப் பழக்கப்படுத்தி வளர்க்கும் கலாசாரமும் தோன்றியது.
ஒரு கட்டத்தில் மனிதன் தன்னுடைய உணவுப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வதற்காக, மற்ற உயிரினங்களின் உணவை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தான். தனது தேவைகளுக்காக அவற்றைப் பழக்கப்படுத்தினான். இதனால் மற்ற இரைகொல்லிகளுக்கு உணவு கிடைக்காத பிரச்சினை தோன்றியது.
அதைத் தொடர்ந்து அந்த இரைகொல்லி விலங்குகள், மனிதர்களின் வாழிடங்களுக்குள் நுழைய ஆரம்பித்தன. அவற்றை மனிதன் வேட்டையாடினான். ஒரு கட்டத்தில் இந்த வேட்டை குறிப்பிட்ட சில உயிரினங்களை அழிக்கும் நிலைக்கே இட்டுச் சென்றது.
இதற்கு உதாரணமாக வடஅமெரிக்காவில் ஓநாய்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டதை சொல்லலாம். எப்படி என்றால், அங்கே ஒரு ஓநாய்கூட இல்லை என துடைத்தழிக்கப்படும் அளவுக்கு! அதேபோல ஒரு காலத்தில் அமெரிக்காவில் 3-6 கோடி இருந்த அமெரிக்கக் காட்டெருமைகள், தற்போது 15,000 மட்டுமே இருக்கின்றன.
போலி போட்டி
மனிதர்கள் செய்யும் இன்னொரு மிகப்பெரிய தவறு, விலங்குகளுக்கு உணவளிப்பது. சிம்பன்ஸி குரங்குகளைப் பற்றி பல வருடங்களாக ஆய்வு செய்துவரும் பிரபல ஆராய்ச்சியாளர் ஜேன் குடால் தனது அனுபவங்களைக் குறிப்பிட்டபோது, ‘ஆய்வுக்காகச் சில சிம்பன்ஸிகள் கூட்டமாகக் கூண்டில் அடைக்கப்பட்டிருந்தன. அவை காடுகளில் இருந்தவரை சுயமாக உணவு தேடிக்கொண்டன. ஆனால், இங்கே மனிதர்கள் உணவு வழங்க ஆரம்பித்ததில் இருந்து, அந்த உணவுக்காகச் சிம்பன்ஸிகள் போட்டி போட்டு அடித்துக்கொண்டன' என்கிறார். விலங்குகளின் இயல்பு வலுக்கட்டாயமாகத் திரிக்கப்படுவதை, இதில் புரிந்துகொள்ளலாம்.
வாழிட அழிப்பு
வாழிட அழிப்பாலும் விலங்குகளின் குணாதிசயங்கள் அதிகளவில் மாறுகின்றன. உதாரணத்துக்கு, 'போலார் பீர்' எனப்படும் பனிக் கரடியை எடுத்துக்கொள்வோம். இது புலியைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிக இறைச்சியை உணவாக உட்கொள்ளும். பூமியில் மிக அதிகளவு இறைச்சியை உட்கொள்ளும் உயிரினம் இது.
ஆனால், சமீப காலமாகத் தீவிரமடைந்துவரும் பருவநிலை மாற்றத்தால் (Climate change), அதற்கான உணவு முழுமையாகக் கிடைப்பதில்லை. எனவே, இவை மனித வாழிடங்களுக்குள் நுழைகின்றன.
இப்போது கனடாவில் உள்ள ஹட்சன் பே, பனிக் கரடிகளின் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. காரணம், பனிக் கரடிகளின் வரவு அந்த அளவுக்கு அதிகரித்துவிட்டதுதான். ஊருக்குள் வரும் பனிக் கரடிகளைப் பிடிப்பதற்காகவே அங்கு ‘பியர் போலீஸ்' என்ற படை உருவாக்கப்பட்டுள்ளது. பிறகு ஊருக்குள் வரும் கரடிகளைப் பிடித்து, விலங்கு காட்சிசாலையில் விட்டுவிடுகிறார்கள்.
ஒரு நாளைக்குச் சுமார் 80 கி.மீ. தொலைவு சுற்றக்கூடிய இயல்பு கொண்டவை பனிக் கரடிகள். இவற்றைக் குறுகிய விலங்கு காட்சி சாலை அறைக்குள் பூட்டி வைத்தால், அவை என்ன செய்யும்? அறையில் இருக்கும் மற்றொரு பனிக் கரடியைக் கொன்றுவிடும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.
ஆக, அவற்றின் இயல்பான வாழிடங்களுக்கு மாறாகப் புதிய இடத்தில் அடைக்கப்படும்போது, அவற்றின் இயல்பு மாறுவது தெளிவாகிறது.
மனித - விலங்கு எதிர்கொள்ளல்
பொதுவாக, மனிதர்களுடனான மோதல் போக்கை விலங்குகள் விரும்புவதில்லை. அதையும் தாண்டி மனித - விலங்கு எதிர்கொள்ளல் ஏற்பட்டால், அதற்குக் காரணம் மனிதனே அன்றி, விலங்குகள் அல்ல.
இதற்கு உதாரணமாகப் புலிகளை எடுத்துக்கொள்வோம். மனிதன் புலிகளுக்கு உணவாவதில்லை என்பது அடிப்படை உண்மை. இது இப்படியிருக்க, மேற்கு வங்கத்தில் உள்ள புகழ்பெற்ற சுந்தரவனக் காடுகளில் ஒவ்வொரு வருடமும் சுமார் 150 பேர் புலிகளால் கொல்லப்படுகிறார்கள்.
இதையடுத்துச் சுந்தரவனக் காட்டுப் பகுதிகளில் மீன் பிடிக்கச் செல்பவர்கள், தங்கள் முதுகுக்குப் பின்னால் புலி உருவங்களை வரைந்துகொண்டு சென்றார்கள். புலிகள் பின்னால் இருந்து தாக்கும் குணமுடையவை என்பதால் இந்த ஏற்பாடு.
இந்த நடவடிக்கை மூலம் புலிகள், மனிதர்களைக் கொல்வது குறைந்தது. புலிகள் மனிதர்களைக் கொல்வது சந்தர்ப்பவசத்தால்தான் என்பது தெரிய வந்தது.
இணக்கம் சாத்தியமா?
இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, விலங்குகளுடன் மனிதர்கள் இணக்கமாக வாழவே முடியாதா என்ற கேள்வி எழுகிறது.
ஏன் முடியாது?
வட ஆப்பிரிக்கப் பகுதியான மொரிஷியானாவில் நைல் முதலை வகை கிட்டத்தட்ட அழிந்துவிட்டது என்று இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) 1992-ம் ஆண்டு கருதியது. ஆனால், இன்றைக்கு அங்கு அவை அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன.
அதற்குக் காரணம், அப்பகுதி மக்கள் அவற்றை வேட்டையாடுவதில்லை. ‘வேட்டையாடினால் தங்கள் குடும்பத்துக்கு ஆகாது' என்று அவர்கள் நம்புகிறார்கள். அதேபோல, கானா நாட்டிலும் முதலைகள் கொல்லப் படுவதில்லை. முதலைகள் இருக்கும் அதே நீர்நிலையில் மக்கள் குளிக்கிறார்கள். அதன் கரையிலேயே மண்பாண்டம் செய்கிறார்கள்.
இதன் மூலம் முதலைகள் மனிதர்களிடம் மறைமுகமாகக் கூற விரும்பும் செய்தி இதுதான்: "நீ வாழு, எங்களையும் வாழவிடு".