முதுமையோ மரணமோ தள்ளிப்போடக் கூடியவைதான், ஆனால் தவிர்க்க முடியாதவை.
ஒரு தொண்டு கிழவி காட்டில் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்தாளாம். சிரமம் தாளாத ஆற்றாமையில் “எமனே, நீ வர மாட்டாயா!” என்று புலம்பினாளாம். சடாரென்று எமன் அவள் முன் தோன்றி, “என்ன பாட்டி, என்னை எதற்குக் கூப்பிட்டாய்?” என்று கேட்டானாம். ஒரு விநாடி திகைத்த கிழவி உடனடியாகச் சுதாரித்து, “இந்த சுள்ளிக்கட்டைத் தூக்கி என் தலையில் வைக்கத்தான் கூப்பிட்டேன்…” என்றாளாம்.
வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் முடிந்தவரை மரணம் தள்ளிப்போக வேண்டும் என்றே பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள். அறிவியல் மற்றும் மருத்துவத்தின் சாதனைகள் மூலம் மனிதரின் சராசரி வாழ்நாள் அதிகரித்து உலகில் முதியவர்களின் எண்ணிக்கையும் கூடியிருக்கிறது. ஆயினும் மிகச் சிலரே 90 வயதைக் கடக்கிறார்கள். கடந்த 150 ஆண்டுகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எதிர்பார்ப்பு ஆயுட்காலம் ஓரிரு ஆண்டுகளே அதிகரித்துள்ளது. முதுமையையோ அதன் பாதிப்புகளையோ வராமல் தடுக்க முடியவில்லை.
மனித உடலில் இதயமும் தமனிகளும் அடங்கிய ரத்த ஓட்ட மண்டலம்தான் முதுமையின் காரணமாக முதலில் பாதிக்கப்படுகிறது. ரத்தக்குழல் இறுக்கம் 25% மரணங்களுக்குக் காரணமாகிறது. ரத்தக்குழல்களின் உட்பரப்பில் கொழுப்பு படிந்து அவற்றின் குறுக்களவைக் குறைப்பதே இந்த இறுக்கத்துக்குக் காரணம். அதன் விளைவாக இதயத்தின் பணிச்சுமை அதிகரித்து ரத்த அழுத்தம் அதிகமாகும். அழுத்தம் காரணமாக மூளையிலுள்ள ரத்தக்குழல்கள் வெடித்து மரணமோ, பக்கவாதமோ ஏற்படலாம். இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்கிற தமனிகளில் இறுக்கம் அதிகமாகி அடைப்பும் ஏற்பட்டுவிட்டால் இதயத்துக்கு ஆக்சிஜன் (பிராண வாயு) வழங்கல் தடைபட்டு இதயவலி ஏற்படும். அது முற்றினால் இதயச் செயலிழப்பும் மரணமும் விளையும்.
கொலஸ்ட்ரால் அபாயம்
ரத்தக்குழல்களில் கொழுப்புப் படிவதில் ஏதோ ஒரு வகையில் கொலஸ்ட்ரால் சம்பந்தப்பட்டிருக்கிறது. ரத்தத்தின் பிளாஸ்மாவில் பல கொழுப்புப் புரத வகைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றுடன் கொலஸ்ட்ரால் இணைந்துள்ளது. சில கொழுப்புப் புரதங்களின் செறிவு நிலையாக இருக்கும். வேறு சிலவற்றின் செறிவு உணவு உண்டபின் ஏறி, சில மணி நேரத்துக்குப் பிறகு இறங்கும். உடல் பருமனாக இருப்பவர்களின் ரத்தத்தில் சிலவகைக் கொழுப்புப் புரதங்களின் செறிவு கூடுதலாயிருக்கும். கொலஸ்ட்ரால் இணைந்த ஒரு வகை, உடல் பருமனான வர்களின் ரத்தத்தில் அதிகமாயிருப்பதால் ரத்தக்குழ லிறுக்கக் கோளாறுகளை உண்டாக்கும். ஒல்லியானவர் களைவிட உடல் பெருத்தவர்களுக்கும் நீரிழிவு நோயுள்ளவர்களுக்கும் இதற்கான வாய்ப்புகள் அதிகம்.
எனவே ஒல்லியானவர்களும், சிறிய உடலுள்ளவர்களும் நீண்ட காலம் வாழ்வது தற்செயலானது அல்ல. உணவை ஒழுங்குபடுத்தினால் ரத்தக்குழலிறுக்கம் ஏற்படுவதைத் தடுக்கலாம் என்று ஆய்வுகளில் சில முடிவுகள் தெரிவிக்கின்றன. பால், முட்டை, வெண்ணெய் போன்ற விலங்குக் கொழுப்புகளில் கொலஸ்ட்ரால் அதிகம். தாவரக் கொழுப்புகளில் அது இல்லவேயில்லை. அவற்றிலுள்ள கொழுப்பு அமிலங்களில் தெவிட்டாத வகையைச் சேர்ந்தவையே அதிகம். அவை ரத்தக்குழல்களில் கொலஸ்ட்ரால் படிவதைத் தடுப்பதாகத் ஆய்வுகளில் சில முடிவுகள் தெரிவிக்கின்றன. உணவு மூலம் கிடைப்பது தவிர மனித உடலே கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்துகொள்கிறது. எனவே கொலஸ்ட்ரால் இருப்பது மட்டுமே ஆபத்தானது அல்ல. பாரம்பரியம் காரணமாகச் சில உடல்களுக்கு அதை ரத்தக்குழல்களின் உட்பரப்பில் வண்டலைப் போலப் படிய வைக்கிற தன்மையிருப்பதால்தான் சிக்கல் தோன்றுகிறது. உடலில் உபரியாகக் கொலஸ்ட்ரால் உற்பத்தியாவதையும் அது ரத்தக்குழல்களின் உட்பரப்பில் படிவதையும் தடுக்க மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ரத்தக்குழல் முழுமையாக அடைபட்டுவிட்டால்கூட, உடலின் வேறு பகுதியிலிருந்து ஒரு தமனியை எடுத்து மாற்றுப் பாதையாகப் பொருத்திவிட முடியும். இத்தகைய சிகிச்சைகள் மூலம் ஒருவரது ஆயுளை நீட்டித்துவிட முடியாது. எனினும் இறுதிக் கட்டத்தில் இதய வலியின் சித்திரவதையைத் தடுக்கலாம். அதை அனுபவித்தவர்களுக்கு இந்த சிகிச்சை பெரிய ஆசீர்வாதம் என்பது தெரியும்.
நீண்ட ஆயுளின் ரகசியம்
வேறு எந்த வியாதி வந்தாலும் வராவிட்டாலும் முதுமை வந்தே தீரும். சில பேருக்கு வேகமாக வரும், சிலருக்கு மெதுவாக வரும். பொதுவாகப் பாலூட்டிகளின் ஆயுள் அவற்றின் உடல் பரிமாணத்தைப் பொறுத்திருக்கிறது. மூஞ்சூறுகள் ஒன்றரை ஆண்டுகளே வாழ்கின்றன. பெரிய எலிகள் நாலைந்து ஆண்டுகளுக்கும், முயல்கள் 15 ஆண்டுகளுக்கும், நாய்களும் பன்றிகளும் 20 ஆண்டுகளுக்கும், குதிரை 40 ஆண்டுகளுக்கும், யானை 70 ஆண்டுகளுக்கும் சராசரியாக உயிர் வாழ்கின்றன.
பொதுவாக இதயம் 100 கோடி முறை துடிக்க ஆகிற காலத்துக்குத்தான் பாலூட்டிகள் உயிர் வாழ்கின்றன. மூஞ்சூறின் இதயம் நிமிஷத்துக்கு 1,000 முறை துடிக்கிறது. அதன் காரணமாக அது அற்ப ஆயுளில் போய்விடுகிறது. யானையின் இதயம் நிமிஷத்துக்கு 20 முறைதான் துடிக்கிறது, அது அதிக ஆயுளுடன் உள்ளது.
இந்த விதிக்கு விலக்கு மனிதன்தான். யானையையும் குதிரையையும்விடச் சிறிய உடம்பைப் பெற்றிருந்தாலும் அவன் எல்லாப் பாலூட்டிகளையும்விட அதிகமான சராசரி ஆயுளைப் பெற்றிருக்கிறான். சில வகை ராட்சத ஆமைகள்தான் மனிதனைவிட அதிக காலம் வாழ்கின்றன. அவை மிகவும் மெதுவாக நடமாடுவதால் அவற்றின் இதயத் துடிப்பு வீதம் குறைவாயிருக்கிறது. மனிதரின் இதயம் நிமிஷத்துக்கு 72 முறை துடிக்கிறது. ஜப்பானியர் ஒருவர் 115 ஆண்டுகள் வாழ்ந்து உலக சாதனை படைத்திருக்கிறார். அவருடைய இதயம் ஏறத்தாழ 400 கோடி முறை துடித்திருக்கும்.
மனிதனுக்குப் பரிணாமப் படியில் நெருங்கிய உறவான சிம்பன்சீக்கள்கூட மனிதரின் அளவுக்கு உயிர் வாழ்வதில்லை. மனிதரைவிடக் கணிசமாகப் பெரிய உடலைக் கொண்ட கொரில்லாவுக்கு 50 வயதிலேயே முதுமை வந்துவிடுகிறது.
மற்றெல்லா விலங்குகளினுடையதையும்விட மனித இதயம் சராசரியில் அதிக முறை துடிக்கிறது. அப்படியும் மனிதருக்கு இவ்வளவு அதிக ஆயுள் இருப்பது இயற்கை தந்திருக்கிற சலுகை. இருந்தாலும் மனிதர்கள் மட்டுமே இன்னும் அதிகமான ஆண்டுகளுக்கு வாழ முடியாதா என்று ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
முதுமைக்கு காரணம் என்ன?
முதுமை ஏன் வருகிறது என்பதற்குப் பலரும் பல ஊகங் களை வெளியிட்டிருக்கிறார்கள். நோய் எதிர்ப்புத் திறன் மழுங்குதல், செல்களில் புரத மூலக்கூறுகள் படிந்து அவற்றின் இரட்டிப்புத் திறன் தடைபடுதல் போன்றவை முதுமையின் அடையாளங்கள். ஒற்றை செல்லிலிருந்து தொடங்கினால் செல் பிரிதல் சுமார் 50 படிகளுடன் நின்றுவிடுகிறது. செல்லின் ஆக்கக்கூறுகளில் திருத்த முடியாத பிழைகள் ஏற்பட்டுவிடுவதே இதற்குக் காரணமாயிருக்கலாம். அது செல்லின் மரணம் எனலாம்.
அதைத் தடுக்க முடிந்தால் முதுமையையும் மரணத்தையும் சிறிது காலம் தள்ளிப்போட முடியும். பறவைகள் தமக்குச் சமமான உடல் பரிமாணமுள்ள பாலூட்டிகளைவிட அதிக காலம் உயிர் வாழ்கின்றன. இத்தனைக்கும் விலங்குகளைவிடப் பறவைகளின் உடலில் வளர்சிதை மாற்ற வேகம் அதிகம். அவற்றின் உடலமைப்பில் முதுமையைத் தாமதப்படுத்துகிற கூறுகள் இருக்கக்கூடும் என ஆய்வர்கள் கருதுகிறார்கள்.
மனிதருக்கு மரணமே வராமல் தடுத்துவிட முடிந்தால் அதைவிடப் பெரிய சிக்கல் வரும். ஜனத்தொகையைக் கட்டுப்படுத்தப் புதிதாகக் குழந்தைகள் பிறப்பதைத் தடை செய்ய வேண்டியிருக்கும். முதியவர்களே தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருப்பார்கள். பழைய சிந்தனைகளும் பழைய வாழ்க்கை முறைகளுமே நீடிக்கும். புதிய குழந்தைகள் வந்தால்தான் புதிய மூளைகள், புதிய மரபியல் அமைப்புகள், புதிய பரிணாம வளர்ச்சிகள் வந்து மனித இனம் மேம்படும். குழந்தைகளில்லாத ஓர் உலகத்தைக் கற்பனை செய்து பார்க்கவே கஷ்டமாயிருக்கிறது.
சிரஞ்சீவித்தன்மை உண்மையில் மரணத்தைவிட மோசமானதாகத்தானிருக்கும்.
கே.என். ராமசந்திரன், பேராசிரியர் (ஓய்வு).